மேற்கு வங்கத்தில் காஸ் சிலிண்டர் மானியம் வந்ததா என சரிபார்க்க சென்ற பெண்ணின் வங்கிக் கணக்கில் மிகப் பெரிய தொகை வரவு காட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் குல்ட்டாலி பகுதியைச் சேர்ந்த காஷ்மீரா ஷேக் ஜரி தொழில் செய்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவர், காஸ் மானியம் தனது கணக்கில் வந்ததா என்பதை உறுதி செய்ய பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு கணக்கு இருப்பை ஊழியர்கள் சரிபார்த்த போது, அவரது கணக்கில் ₹99,99,99,997 இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. இது ₹100 கோடிக்கு ₹3 குறைவான தொகை என்பதால் அவர் அதிர்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வங்கி உயரதிகாரிகள் உடனடியாக அந்த கணக்கை முடக்கினர். தவறுதலாக வரவு செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





