சென்னை அருகே ஆவடியில் நடைபெற்ற இந்திய விமானப்படை கீழ்நிலை எழுத்தர் (எல்.டி.சி.) எழுத்துத் தேர்வில் முறைகேடு செய்ததாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவடி விமானப்படை நிலையத்தில் நடைபெற்ற இந்த தேர்வில் நாடு முழுவதும் இருந்து 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேர்வு தொடங்குவதற்கு முன் வழக்கமான நுழைவுச்சீட்டு மற்றும் ஆவணச் சரிபார்ப்பின்போது, கவுரவ் (21) என்பவர் அமன் குமார் என்பவருக்குப் பதிலாக தேர்வு எழுத வந்தது அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் போலி சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், தேர்வறையில் தடைசெய்யப்பட்ட ஜி.எஸ்.எம். டிரான்ஸ்மீட்டர் எனும் தகவல் பரிமாற்ற கருவி தொடர்பான ஆதாரங்களும் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தியபோது, அனில் (27) என்பவர் சுனில் என்பவருக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதத் தயாராக இருந்ததும் தெரிய வந்தது.

அதே அறையில் இருந்த மற்ற இருவரின் உடைமைகள் குறித்து விசாரித்ததில், சவான் (25), தீபக் (24) ஆகியோர் ஜி.எஸ்.எம். டிரான்ஸ்மீட்டர் மற்றும் காதுக்குள் பொருத்தக்கூடிய சிறிய ப்ளூடூத் இயர் பட்ஸ் போன்றவற்றுடன் தேர்வுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் தேர்வறைக்கு விரைந்து சென்று இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விமானப்படை நிலைய அதிகாரி சத்யேந்திர குமார் ஆவடி முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நால்வரையும் திங்கட்கிழமை கைது செய்தனர்.