திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டிக்குள் மனித கழிவும், பள்ளியை எச்சரிக்கும் வாசகங்களுடன் ஒரு குறிப்பும் கிடைத்ததாக தகவல் வெளியாகி, புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்த பள்ளியில் 113 மாணவியர் உட்பட மொத்தம் 213 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணி முழுமையாக முடிந்தால் அருகிலுள்ள குடியிருப்பாளர்களின் செல்லும் வழி பாதிக்கப்படலாம் என்ற காரணத்தால் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த எதிர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலர் ஆதரவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை மதியம் குடிநீர் அசுத்தமாக வந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, மேல்நிலைத் தொட்டியை ஆய்வு செய்தபோது மலக்கழிவுகள் மற்றும் பள்ளிக்கு எச்சரிக்கை விடுக்கும் வாசகங்களுடன் ஒரு துண்டுக் காகிதம் இருப்பது கண்டறியப்பட்டது.
பள்ளி நிர்வாகத்தின் தகவலின் பேரில் எஸ்.பி. ஜெயக்குமார், வேடசந்தூர் தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர் சத்தியபிரபா, ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.





