பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கியதாக கூறப்படும் நபர்கள் மற்றும் கோவையில் உள்ள ஒரு அரபிக் கல்லூரியுடன் தொடர்புடைய சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை (ED) நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கை, 2022 அக்டோபர் 23 அன்று கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் மேற்கொள்ளப்படுகிறது. அந்த சம்பவத்தில் ஐ.எஸ். தொடர்புடைய ஜமேஷா முபின் (28) உயிரிழந்தார். வழக்கை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரித்து, அவரது கூட்டாளிகள் 14 பேரை கைது செய்தது.

இந்த வலையமைப்புடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு ED வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சென்னை, கோவை, மும்பை உள்ளிட்ட 15 இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக அதிகாரிகள் கூறினர்.

ED அதிகாரிகள் கூறுகையில், கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன் (27) ஐ.எஸ். அமைப்பின் தமிழக தலைவராக செயல்பட்டதாகவும், 2019ல் இலங்கையில் சர்ச் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக கூறப்படும் சஹ்ரான் ஹாஷிம் (34) உடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்தனர். தமிழகத்தில் பயங்கரவாதத்தை வளர்க்க சஹ்ரான் கோவைக்கு வந்து ரூ.10 லட்சம் வழங்கியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், அசாருதீன் கேரளாவில் NIA-வால் கைது செய்யப்பட்ட பிறகு ஜமேஷா முபின் உள்ளிட்டோருக்கான நிதி ஓட்டம் தடைபட்டதாகவும், அந்த காலகட்டத்தில் சென்னையைச் சேர்ந்த ஜமீல்பாஷா (45) கோவை குனியமுத்தூரில் நடத்தி வந்த அரபிக் கல்லூரியை மையமாக்கி ‘கல்லூரி வளர்ச்சி நிதி’ என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் திரட்டியதாகவும் அதிகாரிகள் கூறினர். நிதி திரட்டலில் தாஹா நசீர் (40) முக்கிய பங்கு வகித்ததாகவும், அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர்கள் நன்கொடையாக பணம் வழங்கியதாக பதிவுகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். அந்த பட்டியலை தயாரித்து, கல்லூரி மற்றும் நன்கொடையாளர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக ED கூறியது.