முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் சாலைப் பணிகளுக்கான டெண்டர்கள் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், இதனால் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) ஆரம்பகட்ட விசாரணை செய்து அரசுக்கு அறிக்கை அளித்த நிலையில், வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. முன் விசாரணைகளில், குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கே.எஸ்.கந்தசாமி, கே.விஜயகார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பாக, பிப்.27 அன்று பொதுத் துறை செயலருக்கு DVAC கடிதம் அனுப்பியதாகவும், அந்த கோப்புகள் ஐந்து மாதங்கள் நிலுவையில் இருந்ததற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தாமதத்துக்கான காரணங்களை விளக்கி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரீட்டா ஹரிஷ் தக்கர் மற்றும் தற்போதைய செயலர் சுந்தரவல்லி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. DVAC தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், வழக்கு தொடர அனுமதி தொடர்பான கோப்பு ஜூலை 22 அன்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
பொதுத் துறை தரப்பின் மனுவை சுட்டிக்காட்டிய நீதிபதி, வழக்கு தொடர அனுமதி வழங்கும் செயல்முறையில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளிடமே விளக்கம் கேட்பது வழக்கமற்ற நடைமுறை எனக் குறிப்பிட்டு, “ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மட்டும் இப்படியான சிறப்பு சலுகை ஏன்?” என கேள்விகளை எழுப்பினார். இந்த நடைமுறையை நிறுத்த அறிவுறுத்திய நீதிமன்றம், வழக்கை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது.





