டில்லி ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டங்கள் நடத்துவதற்கு பாதுகாப்பற்ற இடமாக அறிவித்து, அதற்கு மாற்றாக வேறு இடத்தை ஒதுக்க வேண்டும் எனக் கோரிய பொதுநல மனுவில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பு போராட்டம், 2012 நிர்பயா வழக்கு தொடர்பான போராட்டங்கள், 2023 மல்யுத்த வீராங்கனையரின் போராட்டம், சமீபத்திய ‘நீட்’ தேர்வு தொடர்பான போராட்டம் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளுக்கு ஜந்தர் மந்தர் சாட்சியாக இருந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அப்பகுதியில் நுழைவு–வெளியேறும் வழிகள் குறுகியதாக இருப்பதால் பெருந்திரள் கூடும் போது கடும் நெரிசல் ஏற்படுகிறது என்றும், இதனால் அவசர மருத்துவ உதவிகள் வழங்குவதில் தடைகள் உருவாகலாம் என்றும் வாதிட்டார். சமீபத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மோதல் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதைக் கேட்ட அமர்வு, நுழைவு–வெளியேற்ற வழித்தடங்கள் மற்றும் அவசர மருத்துவ உதவி தொடர்பான கவலைகள் முக்கியமானவை எனக் கூறியது. இதையடுத்து மத்திய அரசு, டில்லி அரசு மற்றும் டில்லி போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உரிய விளக்கங்களை அதிகாரிகளிடமிருந்து பெற வேண்டும் என்றும் தெரிவித்தது.

மேலும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக மனுதாரர் தெரிவித்த கவலைக்கு பதிலளித்த தலைமை நீதிபதி, சட்டம்–ஒழுங்கை பராமரிப்பது அதிகாரிகளின் பொறுப்பு என்றும், அவர்கள் தவறினால் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறினார்.