மதுரை மாவட்டம் மேலுார் அருகே தும்பைபட்டி பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காவல்துறை தகவலின்படி, தும்பைபட்டி பாலத்தில் காலை 6 மணியளவில் முன்னே சென்ற டூவீலர் மீது மோதாமல் இருக்க ஸ்ரீராம் (25) ஓட்டிய கார் திடீரென திருப்பப்பட்டது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை கடந்து எதிர்திசையில் திருச்சி நோக்கி வந்த மற்றொரு காருடன் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஸ்ரீராம், அவரது மனைவி ரஞ்சனா (24), மகள் கிருத்திகா (2), சகோதரர் பாலாஜி (30), தாய் ராஜகுமாரி (52) ஆகியோர் உயிரிழந்தனர். அதே காரில் பயணித்த தந்தை கனகராஜ் (55) மற்றும் மற்றொரு காரை ஓட்டிய தனியார் நிறுவன ஊழியர் பிரகாஷ் (42) ஆகியோர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை பாடிகுப்பம் பகுதியில் வசித்த குடும்பத்தினர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாலாஜிக்கு பிறந்த ஆண் குழந்தையை பார்க்கச் சென்றதாக கூறப்படுகிறது. மீட்பு பணிகளில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்; விபத்து இடத்தை மாவட்ட நிர்வாக மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.