பேஸ்புக்கில் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்ற வீடியோ தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்க, ஆகஸ்ட் 5 மற்றும் 6 தேதிகளில் மெட்டா நிறுவனத்தின் குழுவை இந்தியாவுக்கு அரசு அழைத்துள்ளதாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜூலை 28 அன்று பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், ‘நீட்’ இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டப் பின்னணியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை வழங்கியிருந்தார். அந்த வீடியோ திடீரென நீக்கப்பட்டாலும், சில மணி நேரங்களில் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டது.
இது தொழில்நுட்ப கோளாறு என பேஸ்புக் நிர்வாகம் கூறி மன்னிப்பும் கேட்டது. இதே விவகாரம் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துக்கான பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது; அந்த கூட்டம் பா.ஜ.க. லோக்சபா எம்.பி. நிஷிகாந்த் துபே தலைமையில் நடைபெற்றது.
நிலைக்குழு பரிந்துரைப்படி, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மெட்டா போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் திட்டமிட்டபடி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், முக்கிய கணக்குகள் மீது தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து மெட்டா குழுவிடம் அரசு கேள்வி எழுப்பும் என்றும் கிருஷ்ணன் தெரிவித்தார்.





