புதுடில்லி: பேஸ்புக்கில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்ட வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில், மெட்டா நிறுவன அதிகாரிகளிடம் பார்லிமென்ட் நிலைக்குழு உறுப்பினர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பி, பொறுப்பும் நடவடிக்கையும் குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 3-ஆம் தேதி டில்லியில் நடந்த கூட்டத்தில், சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் ஒழுங்குமுறை, பயனர் தனியுரிமை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கூகுள், மெட்டா, எக்ஸ், ஸ்நாப்சாட் நிறுவன பிரதிநிதிகள் நிலைக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதில் மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளும் பங்கேற்றனர்.

டில்லி வட்டாரங்கள் கூறுவதன்படி, மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் குழு கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. அந்த வீடியோ நீக்கத்திற்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என மெட்டாவிடம் எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மெட்டா அதிகாரிகள் வருத்தம் தெரிவித்ததுடன், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே வீடியோ நீக்கப்பட்டதாக விளக்கம் அளித்தனர்.

ஆனால் குழுவினர் அந்த விளக்கத்தை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. மன்னிப்பு கேட்பது மட்டும் போதாது; யார் பொறுப்பு என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், நீக்கத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மேலும், மெட்டா தளத்தில் ஆட்சேபனைக்குரிய மற்றும் சர்ச்சைக்குரிய தகவல்கள் தொடர்பாக நிறுவனம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதையும் குழு கேள்வியாக முன்வைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.