தமிழக அரசு பள்ளி வளாகங்களில் அரசியல் சார்ந்த செயல்பாடுகள் நடப்பதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுகள் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
த.வெ.க. அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, அரசு பள்ளிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி கட்சியினர் ‘ரீல்ஸ்’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து, பள்ளி வளாகங்களில் கல்விசார் செயல்பாடுகளைத் தவிர்த்து அரசியல் நிகழ்வுகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை கடுமையான அறிவிப்பை வெளியிட்டது.
ஆனால் அந்த எச்சரிக்கைக்குப் பிறகும் பல பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வதாக கூறப்படுகிறது. காரைக்குடியில் நடந்த பள்ளி நிகழ்ச்சியில் கனிம வளத்துறை அமைச்சர் பிரபு பங்கேற்றபோது, மாணவர்கள் “டி.வி.கே., டி.வி.கே.” என்று கோஷமிட்ட நிலையில் அவர் நடுவில் நின்று ரசிப்பது போன்ற வீடியோ வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அறிவிப்பு இருந்தும் இத்தகைய சம்பவங்கள் தொடர்வது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பதாக கூறப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.





