ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் பிரகாரத்தில் ஹிந்தி மற்றும் தமிழ் பாடல்களுக்கு நடனமாடிய இரண்டு பெண்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பல பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோயிலின் புனிதத் தன்மையை பாதிக்கும் வகையில் இது இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
கோயிலுக்குள் பக்தர்கள் அலைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்றாம் பிரகாரத்தில் மட்டும் புகைப்படம் எடுக்க தனியாருக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் நடைமுறையில் பலர் அலைபேசியில் புகைப்படம், வீடியோ எடுப்பதை கோயில் நிர்வாகம் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பாலி நகரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கோயில் வளாகத்தில் நடனமாடிய வீடியோ வெளியானது.
இதுகுறித்து ஹிந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, இத்தகைய வீடியோக்கள் ஹிந்துக்களின் மனதை புண்படுத்துவதாகவும், கோயில் காவலர்கள் இதை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது என்றும் கூறினார்.
இதே நிலை தொடர்ந்தால் கோயிலின் பாதுகாப்பும் ஒழுங்கும் கேள்விக்குறியாகும் என அவர் எச்சரித்தார். கோயிலை வழிபாட்டுத் தலமாக பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





