புதுடில்லி: திருமணம் செய்யாமல் இருந்தாலும், கணவன்-மனைவி உறவைப் போல வாழும் உறவில் உள்ள பெண்களுக்கு குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் என்று உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு வழங்கியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த டாக்டர் லோகேஷ், தனது முதல் திருமணத்தை மறைத்து, மற்றொரு பெண்ணுடன் ‘லிவ்-இன்’ முறையில் கணவன்-மனைவி போல் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண், வரதட்சணை தொடர்பான கொடுமை, சித்ரவதை மற்றும் தீ வைத்து கொலை செய்ய முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவு செல்லுபடியாகும் திருமண உறவுகளுக்கு மட்டுமல்லாமல், விவாகரத்து போன்ற சூழல்களிலும் பொருந்தும் என்றும், திருமணமின்றி சேர்ந்து வாழும் உறவிலும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்றும் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து லோகேஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் நாங்மேகாபம் கோட்டீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது. அதே நேரத்தில், அந்த சட்டப் பிரிவை பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளையும் விதித்தது.
அனைத்து வகை ‘லிவ்-இன்’ உறவுகளுக்கும் இது தானாகவே பொருந்தாது என்றும், பரஸ்பரமாக திருமணம் செய்யும் எண்ணத்துடன், சமூக மற்றும் குடும்ப அமைப்பில் கணவன்-மனைவி போல் வாழும் உறவுகளில் உள்ள பெண்களுக்கு மட்டுமே இந்த சட்டப் பாதுகாப்பு நீட்டிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.





