சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அலுவலகங்களின் அன்றாட செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அரசு தரப்பில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், அந்த இடைவெளியை துறைகளே நிரப்ப வேண்டிய அழுத்தம் உருவாகியுள்ளது.
தலைமை செயலகத்தில் ஒவ்வொரு அமைச்சருக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டிருப்பதுடன், உதவியாளர்கள் மற்றும் அமைச்சக பணியாளர்கள் அங்கு பணியாற்றுகின்றனர். அமைச்சரை சந்திக்க வரும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தண்ணீர், டீ, காபி, ஸ்நாக்ஸ் போன்றவை வழங்கப்படுவதுடன், சில நேரங்களில் உணவும் ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த செலவுகளை பெரும்பாலும் அந்தத் துறையின் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளே கவனிக்க வேண்டிய நிலை இருப்பதாக அதிகாரிகள் கூறினர். ஒரு அமைச்சரின் அலுவலக செலவே மாதத்திற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை செல்லும் என அவர்கள் மதிப்பிட்டனர்.
முன்னைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செலவை கட்டுப்படுத்த அமைச்சர்கள் அலுவலகங்களில் மதிய உணவு வழங்குவது குறைக்கப்பட்டதாகவும், தற்போதைய த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அமைச்சர்களை காண வருவோர் அதிகரித்ததால் தண்ணீர் பாட்டில், டீ, பிஸ்கட் செலவுகள் உயர்ந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் அலுவலகத்தில் இருக்கும் கட்சியினர், ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதும் வழக்கமாகி விட்டதாக கூறப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர் காலத்தில் ஒவ்வொரு அமைச்சர் அறையிலும் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் செலவு பல மடங்கு உயரலாம் என்றும், அப்போது ஒவ்வொரு அமைச்சர் அலுவலகத்துக்கும் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலவு எகிற வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்தனர். முறைகேடுகளைத் தவிர்க்க செலவைக் குறைத்து, அமைச்சர்கள் அலுவலக செலவுக்காக தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும், தற்போது டீ-காபிக்காக மாதம் ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை மட்டுமே அனுமதி இருப்பது ஒரு நாள் செலவுக்கே போதாது என்றும் அவர்கள் கூறினர்.




