சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் காவல் பணியாளர்களை ரகசியமாக கண்காணிக்க, டி.எஸ்.பி.க்கள் மற்றும் உதவி கமிஷனர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாயை இழந்த நிலையில் 17க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை பரங்கிமலையில் 27 வயதுடைய காவலர் விஸ்வநாத் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.
25 முதல் 35 வயதுக்குட்பட்ட காவலர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகமாக மூழ்கி வருவது டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வாலின் கவனத்திற்கு வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். குறிப்பாக ஆயுதப்படை காவலர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, பணியிடங்களில் தேவையின்றி மொபைல் போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இளம் வயது காவலர்களை ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து மீட்பதற்காக கண்காணிப்பு பொறுப்பு டி.எஸ்.பி.க்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், வாரந்தோறும் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.





