மதுரை: ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்களில் கட்டண தரிசனம் நடைமுறையாகி வரும் நிலையில், தரிசனத்துக்கே கட்டணம் வசூலிக்கலாம் என்று அறநிலையத்துறை சட்டத்தில் எங்கும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அறநிலையத்துறை சட்டப்பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற மதுரை வழக்கறிஞர் எஸ். சங்கரன் கூறுகையில், பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த கோயில் நிர்வாகத்துக்கு சட்டம் அனுமதி அளிக்கிறது. ஆனால் பக்தர்களை தரம் பிரிக்கும் வகையில், அவர்களின் உரிமைகளை பாதிக்கும் அல்லது பாகுபாடு ஏற்படுத்தும் புதிய நடைமுறைகளை கொண்டு வரக் கூடாது என்று சட்டப்பிரிவு 57ல் கூறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் அடிப்படையில், தரிசனத்துக்காக பணம் பெற்றுக் கொண்டு டிக்கெட் வழங்குவது கூடாது என்றார். அதே நேரத்தில், கோயிலில் வழங்கப்படும் சேவைகளை அடிப்படையாகக் கொண்டு டிக்கெட் வழங்கலாம் என்றும் விளக்கினார். அர்ச்சனை, அலங்காரம், உற்சவப் பொருட்கள் வழங்கல், வஸ்திரம், மாலை சாத்துதல் போன்றவை சேவைகளாகக் கருதப்படுகின்றன என்றார்.
மேலும், “சிறப்பு கட்டண தரிசனம்” என்ற தனிப்பட்ட சட்டப்பிரிவு இல்லாத நிலையில், வி.ஐ.பி. தரிசனமும் கோயில்களில் இருக்கக் கூடாது என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். கட்டண தரிசனம் மற்றும் வி.ஐ.பி. தரிசனம் தொடர்வதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், தற்போதைய நிலையை சரி செய்ய நீதிமன்றங்களின் தலையீடு தேவைப்படலாம் என்றும் அவர் கூறினார்.





