இந்தியா உள்ளிட்ட 59 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட புதிய சுங்கவரியை எதிர்த்து, அமெரிக்காவின் 25 மாகாணங்கள் இணைந்து சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன.

அறிக்கையின் படி, பொருட்கள் உற்பத்தியில் கட்டாய உழைப்பு பயன்படுத்தப்படுவது தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடந்த மாதம் இந்த சுங்கவரி நடவடிக்கை எடுக்கப்பட்டது. டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து பல நாடுகள் மீது உயர்ந்த வரிகளை விதித்து வருவதாகவும் மாகாணங்கள் குறிப்பிட்டுள்ளன.

வழக்கில், வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ஐ உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என மாகாணங்கள் வாதிட்டுள்ளன. இந்த சுங்கவரி நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

மேலும், இதுவரை வசூலிக்கப்பட்ட சுங்கவரியைத் திருப்பி வழங்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த மாகாணங்களில் அரிசோனா, கலிபோர்னியா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், ஹவாய், இல்லினாய்ஸ், கென்டக்கி, மெய்ன், மேரிலாந்து, மாசசூசெட்ஸ், மிச்சிகன், மினசோட்டா, நெவாடா, நியூ ஜெர்சி, நியூ மெக்சிகோ, நியூயார்க், வட கரோலினா, ஓரிகன், பென்சில்வேனியா, ரோட் தீவு, வெர்மான்ட், வர்ஜீனியா, வாஷிங்டன் மற்றும் விஸ்கான்சின் ஆகியவை இடம்பெறுகின்றன.