லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாமல்லபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் பங்கேற்க தமிழகம் வந்தார்.

இந்த வருகையின் போது சென்னையில் அவர் தமிழக முதல்வர் விஜயை சந்திப்பார் என்ற தகவல் பரவியது. ஆனால் ராகுலின் சென்னை நிகழ்ச்சி நிரலில் அந்த சந்திப்பு இடம்பெறவில்லை; இதனால் இருவரும் சந்திக்கவில்லை.

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், விஜயை சந்திக்கும் திட்டம் இல்லை என்பதை தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் முன்பே தெரிவித்திருந்ததாக கூறினர். மேலும், சந்திப்பு நடக்காததற்கு கருத்து வேறுபாடுகள் காரணமல்ல என்றும் அவர்கள் விளக்கினர்.

அவர்களது தகவலின்படி, ‘இண்டி’ கூட்டணியில் இணைவது குறித்து த.வெ.க. தலைமை எச்சரிக்கையுடன் அணுகுகிறது. தமிழகத்தில் த.வெ.க.–காங்கிரஸ் கூட்டணி அமையலாம் என்ற பேச்சுகள் இருந்தாலும், ‘இண்டி’ கூட்டணியில் சேர்வதாக த.வெ.க. இதுவரை அறிவிக்கவில்லை; மாநிலத்தை மையமாகக் கொண்டு தனித்த அரசியல் அடையாளத்தை முன்னிலைப்படுத்த விரும்புகிறது.

மேலும் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்ற அணுகுமுறையும் இருப்பதால், ‘இண்டி’ கூட்டணியில் சேர்வதில் அவசரம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால், ‘இண்டி’ கூட்டணியில் இணைப்பு குறித்து விஜய் முடிவு எடுக்காத நிலையில், ராகுலை சந்திக்க திட்டமிடவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.