பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலூசிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆக.11-ஐ தன் சுதந்திர தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன், பலூசிஸ்தானை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என உலக நாடுகளிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பரப்பளவில் பெரியதும், இயற்கை வளங்கள் நிறைந்ததும், புவியியல் ரீதியாக முக்கியத்துவம் கொண்டதுமான மாகாணமாக பலூசிஸ்தான் குறிப்பிடப்படுகிறது. பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் கோரி நீண்ட காலமாக போராட்டம் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பில் கூறப்பட்டதன்படி, 1947 ஆகஸ்ட் 11 அன்று பலூசிஸ்தான் தனி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 1948 மார்ச் 27 அன்று பாகிஸ்தான் ராணுவம் பலவந்தமாக ஆக்கிரமித்து தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டதாகவும், அதன்பிறகு பலூச் மக்கள் தொடர்ந்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் பலூசிஸ்தான் விடுதலை அமைப்புகள் தனி நாடாக செயல்பட உள்ளதாக அறிவித்த நிலையில், விடுதலை அமைப்புகள் மற்றும் தேசிய தலைவர்கள் இணைந்து ஆக.11-ஐ ஆண்டுதோறும் பலூசிஸ்தானின் சுதந்திர தினமாக அனுசரிக்கப் போவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பலூசிஸ்தானின் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து, பலூசிஸ்தானை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் பலூசிஸ்தான் குடியரசு மற்றும் அதன் தலைவர்கள் முறையிட்டுள்ளனர்.





