புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து உருவாக்கப்பட்ட ஏ.ஐ. அவதூறு வீடியோவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஆபாச வீடியோக்கள் பரவல் குறித்தும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தலைமை நிறுவனமான மெட்டாவுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், வினாத்தாள் கசிவு குறித்த புகாரை எதிர்த்து டில்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்களுக்கு உறுதியளிக்கும் வகையில் பிரதமர் பேசிய செல்பி வீடியோ, அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அந்த வீடியோ சிறிது நேரம் முடக்கப்பட்டதை மத்திய அரசு கடுமையாக கண்டித்தது. இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதாக கூறி மெட்டா மன்னிப்பு கேட்டது.

ஆனால் அந்த விளக்கம் போதுமானதல்ல எனக் கூறி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதை நிராகரித்தது. மேலும், டில்லியில் இன்று மற்றும் நாளை நடைபெறும் உயர்மட்டக் கூட்டத்தில் ஆஜராகுமாறு மெட்டா அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு செயல்படவில்லை என்றால், தளங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு சலுகைகள் வழங்க முடியாது என்று தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான பார்லி குழு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, அந்த குழுவின் தலைவர் மற்றும் பாஜ எம்பி நிஷிகாந்த் துபே, தனது எக்ஸ் பதிவில், பிரதமர் தொடர்பான அவதூறு ஏ.ஐ. வீடியோக்கள் மற்றும் பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான ஆபாச உள்ளடக்கம் குறித்து தெலுங்கானா போலீஸார் மெட்டா மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறினார். மேலும், நிதி மோசடி செயலிகள் தொடர்பாக ஹைதராபாத் போலீஸ் கூகுள் மீது பதிவு செய்த வழக்குகளை குறிப்பிட்டு, இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இத்தகைய தளங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படாது என்றும், சமூக வலைதளங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டே செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.