சென்னையில் பல்வேறு இடங்களில் செயல்படும் நீதிமன்றங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். இதன் மூலம் வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறையும் என அவர் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய தொடர் சட்ட சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், புதிய வளாகத்தில் 160-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றார். இதற்காக தமிழக முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மாநிலம் முழுவதும் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, வழக்குகள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் கட்சி பேதமின்றி திறமை மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசின் நடவடிக்கைகளின் பலன் சில ஆண்டுகளில் தெளிவாகத் தெரியும் என்றும், வழக்கறிஞர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.