சென்னை: பார்லிமென்டில் முன்வர உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக திமுக ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் மேலிடம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரலில் பார்லிமென்டில் தோல்வியடைந்த லோக்சபா தொகுதி மறுவரையறை மசோதாவை, நடப்பு கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் மஹாராஷ்டிராவில் உத்தவ் சிவசேனா அணியைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் பாஜக ஆதரவுக்கு மாறியதாகவும், இதனால் லோக்சபாவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 318 ஆக உயர்ந்ததாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

மசோதாவை நிறைவேற்ற இன்னும் 42 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், 22 எம்.பி.க்களை கொண்ட திமுக ஆதரவை பெற பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மேலும், “அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீதம் தொகுதிகள் அதிகரிக்கப்படும்” என்ற அம்சம் மசோதாவில் இடம்பெற்றால் திமுக ஆதரிக்கலாம் என்ற கருத்தும் குறிப்பிடப்படுகிறது.

திமுக நேரடியாக ஆதரித்து ஓட்டளிக்காவிட்டாலும், வாக்கெடுப்பை புறக்கணித்தால் கூட அது பாஜகவுக்கு சாதகமாக முடியும் என்பதால், திமுகவை எதிராக ஓட்டளிக்க வைக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், திமுக துணை பொதுச்செயலரும் கட்சியின் பார்லிமென்ட் குழுத் தலைவருமான கனிமொழியுடன் பேச்சு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. ராகுல் காந்தி சென்னை வந்தபோது திமுகவை மறைமுகமாக விமர்சித்ததாகக் கூறி கனிமொழி அதிருப்தி தெரிவித்ததாகவும், டில்லியில் பாஜக எதிர்ப்பில் திமுக பின்வாங்கக் கூடாது என ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியதாகவும் தகவல் கூறுகிறது.