வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்ப்பதும், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக உருவாக்குவதும் நோக்கமாகக் கொண்டு ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா – 2026’ லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின் முக்கிய அம்சமாக, மின்னணு பணப் பரிவர்த்தனை முறைகளில் வணிகர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு தீர்மானிக்க அதிகாரம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள ‘பூஜ்ஜியம் கட்டணம்’ கொள்கை குறித்த விவாதம் மீண்டும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய கட்டண விலக்கு நடைமுறையால் பரிவர்த்தனை செயலாக்கச் செலவுகளை மீட்டெடுப்பது கடினம் என வங்கிகளும், பணப் பரிவர்த்தனை நிறுவனங்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் நிலையில், இந்த முன்மொழிவு மாற்றத்துக்கான சிக்னலாக பார்க்கப்படுகிறது.
பெரிய வணிகர்களின் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் அனுமதிப்பது குறித்து நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் பரிசீலிக்கின்றன என்ற தகவலை அரசு முன்பு மறுத்திருந்தாலும், தற்போது அந்த விவகாரம் மசோதாவில் இடம் பெற்றுள்ளது.
டிஜிட்டல் கட்டணங்களைக் கடந்தும், மசோதாவில் பல வரி சலுகைகள் முன்வைக்கப்பட்டுள்ளன: இந்தியாவில் இருந்து செயல்படும் வெளிநாட்டு முதலீட்டு நிதி மேலாளர்களுக்கான விதிமுறைகள் எளிமைப்படுத்தல் மற்றும் அது இந்தியாவில் வணிகம் செய்வதாக கருதப்படாது என்பதற்கான ஏற்பாடு; ஒப்பந்த உற்பத்திக்காக மொபைல் போன், மடிக்கணினி, டேப்லெட், சர்வர் தயாரிப்பில் பயன்படும் இயந்திரங்கள்/கருவிகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வருமான வரி விலக்கை 2040–41 வரை நீட்டிப்பு; இந்திய சுங்க கிடங்குகளில் உதிரிபாகங்களை சேமித்து ஒப்பந்த உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 15 ஆண்டுகள் வருமான வரி விலக்கு; இந்திய தரவு மையங்களை பயன்படுத்தும் வெளிநாட்டு கிளவுட் நிறுவனங்களுக்கான சில அரசு அனுமதி நடைமுறைகள் நீக்கம்; மேலும் தரவு மையங்களை நேரடி உரிமையுடன் மட்டுமல்லாமல் குத்தகை அடிப்படையிலும் இயக்க அனுமதி வழங்கி, ஏ.ஐ. தரவு மையங்களில் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு உருவாக்குதல் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.





