புதுடில்லி: செல்லுபடியாகும் வாகனக் காப்பீடு உள்ளவர்களுக்கே எரிபொருள் வழங்கும் வகையில் ஒரு நடைமுறையை உருவாக்க மத்திய அரசு பரிசீலிக்கலாம் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சஞ்சய் கரோல், பிரஷாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நாட்டின் சாலைகளில் இயங்கும் வாகனங்களில் 56% வாகனங்களுக்கு காப்பீடு இல்லாதது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், இதனால் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் நேரத்தில் இழப்பீடு பெற முடியாமல் நீண்ட சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகிறது என்றது.

இந்த சிக்கலைக் குறைக்க, வாகனக் காப்பீட்டுடன் எரிபொருள் வினியோகத்தை இணைக்கும் முன்னோடி திட்டத்தை உருவாக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. இதற்காக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI), சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்துடன் இணைந்து திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையின்படி, ஒரு வாகனத்திற்கு செல்லுபடியாகும் காப்பீடு இல்லையெனில், அது புதுப்பிக்கப்படும் வரை பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் வழங்க மறுக்கப்பட வேண்டும். இதன் மூலம் அனைத்து வாகனங்களுக்கும் மூன்றாம் தரப்பு காப்பீட்டை கட்டாயமாக்கும் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 146 அமலாக்கம் வலுப்படும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும், நம்பர் பிளேட்டை அடையாளம் காணும் தானியங்கி கேமராக்கள் மூலம் திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும், நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளில் உள்ள கேமரா வலையமைப்பை காப்பீட்டு நிறுவனங்களின் தரவுத்தளத்துடனும் மத்திய அரசின் ‘வாஹன்’ இணையதளத்துடனும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.