திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ‘குதிரை பேரம்’ வழக்கின் விசாரணைக்கு ஆகஸ்ட் 27 வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொலைபேசியில் பேசிய சிலர் கட்சி மாறி ஓட்டளிக்க ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசினார்கள் என அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தி வந்த திருநாவுக்கரசு உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட சேதுராஜ், கார்த்திக் ஆகியோர் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொருவராக சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்து வருவதைக் குறிப்பிட்டு, ஆக.27 வரை வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. மேலும் தமிழக அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஆக.27க்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, தியாகராஜன், ராஜேஷ், கணேசன், சீனிவாசன், செல்வம் ஆகிய ஆறு பேருக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் ஜாமின் வழங்கினார். அதேபோல் தீபக், செல்வரங்க முருகன், அழகேசன், சக்திவேல் உள்ளிட்ட நான்கு பேருக்கு முன் ஜாமினும் வழங்கப்பட்டது.