மேற்கு வங்க சிறப்பு அதிரடி படை (STF) பாகிஸ்தான் குடிமகன் ஹமீம் மொண்டலை கைது செய்துள்ளதாகவும், அவர் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்புடன் தொடர்புடைய உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளது.
விசாரணையில், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் நடமாட்டத்தை கண்காணித்தல், அவரது பொது நிகழ்ச்சிகளில் கூட்டத்தில் கலந்து கொண்டு கவனித்தல், பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள பலவீனங்களை கண்டறிதல் ஆகியவை ஹமீமுக்கு வழங்கப்பட்ட பணிகளாக இருந்ததாக STF அதிகாரிகள் கூறினர். கொல்கட்டா சினார் பூங்கா பகுதியில் உள்ள முதல்வரின் வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களையும் அவர் நோட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த STF அதிகாரி ஒருவர் கூறுகையில், பல நிகழ்ச்சிகளில் கூட்டத்தில் ஒருவராக கலந்து கொண்டது உறுதியாகியுள்ளது. மேலும், கண்காணிக்கப்பட்ட பகுதிகளில் ஹமீமும் அவரது கூட்டாளிகளும் நடமாடியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மாநில தலைமைச் செயலகமான ‘நபன்னா’வையும் ஹமீம் உள்ளிட்டோர் கண்காணித்ததாக STF கூறுகிறது. விசாரணையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் மற்றும் ‘ஷாசாத் பட்டி’ என குறிப்பிடப்பட்ட நிழல் உலக நபருடன் ஹமீமுக்கு தொடர்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மாதம் டில்லியில் நடந்த போராட்டத்தில் போலீஸ் சீருடையில் கலந்து கொண்டு கலவரம் ஏற்படுத்த முயன்றதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக STF தெரிவித்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.





