புதுடில்லி பார்லிமெண்ட் வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பீஹார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் சந்தித்து பேசினார். பங்கிபூர் இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு நடந்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

பீஹாரில் பாஜவின் கோட்டையாகக் கருதப்படும் பங்கிபூரில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு எம்எல்ஏவாக இருந்த நிதின் நபின் பாஜ தேசிய தலைவராகவும், ராஜ்யசபா எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தொகுதியில் காலியிடம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி வெற்றி பெற்று தொகுதியை கைப்பற்றியது. அந்தக் கட்சியின் வேட்பாளரும், பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார்.

பாஜ கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான நிதிஷ் குமார், பார்லிமெண்ட் வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறைக்குச் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறினார். சந்திப்பின்போது மத்திய அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங் மற்றும் ஜேடியு தேசிய செயல் தலைவர், ராஜ்யசபா எம்பி சஞ்சய்குமார் ஜா ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து பீஹார் மாநில பாஜ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தற்போதைய சூழலில் உள்ள சமகால பிரச்னைகள் குறித்து பேசப்பட்டதாகவும், நிதிஷ் குமாரின் அனுபவமும் வழிகாட்டுதலும் எங்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.