மும்பை போலீஸ் துறையில், பணியில் இல்லாத நபர்களின் பெயர்களில் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கணக்கெழுதி ரூ.6.5 கோடி அளவிலான முறைகேடு நடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
2019–2020 காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ‘சேவார்த்’ சம்பள மென்பொருளில் உள்ள பதிவுகளை புதிய தளத்துக்கு மாற்றும் பணிகள் சமீபத்தில் நடந்தபோது இந்த குறைபாடு கண்டறியப்பட்டது. அப்போது, போலீஸ் துறையுடன் எந்த தொடர்பும் இல்லாத 10 பேரின் பெயர்கள் ஊழியர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
வடக்கு மண்டல போலீஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2019 முதல் பிப்ரவரி 2020 வரைவும், பின்னர் ஜூன் 2020 முதல் செப்டம்பர் 2020 வரைவும் மாதந்தோறும் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வருகைப் பதிவேடுகள் மற்றும் பணிப் பதிவுகள் போலியாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து, அப்போதைய நிர்வாக அதிகாரிகள் ராம்கிஷன் கோஸ்வாமி, நாகேஷ் தல்வாடேகர், விஜயா சவான், தலைமை எழுத்தர் அஜெய் ரத்தோட், மூத்த எழுத்தர் அமோல் மேஷ்ராம் ஆகியோர் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், குற்றச்சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி சேவை எண் மற்றும் ஓய்வூதிய திட்ட எண்களை உருவாக்கி 10 பெயர்களை சேர்க்க உதவியதாக கூறப்படும் விஜயா சவான் மற்றும் அமோல் மேஷ்ராம் இருவரும் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
போலி ஊழியர்களின் பெயர்களில் திறக்கப்பட்ட வங்கி கணக்குகளை இயக்கியது யார், அதன் மூலம் பணம் யாருக்கு சென்றது என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். துலே, லாத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சிறிய அளவில் சம்பள பட்டியல் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போலீஸ் துறையின் சம்பள வினியோக நடைமுறைகள் குறித்து தணிக்கைக்கு உத்தரவு விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





