நீட் தேர்வில் அசல் ஓ.எம்.ஆர். விடைத்தாளுக்கும், தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) இணையதளத்தில் பதிவேற்றிய ஓ.எம்.ஆர். நகல்களுக்கும் பெரிய அளவில் முரண்பாடு இருப்பதாகக் கூறி, தேர்வர்கள் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனுவில், தாங்கள் குறித்த பதில்களுக்கும் இணையதளத்தில் காணப்படும் பதில்களுக்கும் வேறுபாடு இருப்பதாகவும், அசல் ஓ.எம்.ஆர். மற்றும் பதிவேற்றப்பட்ட ஓ.எம்.ஆர். நகலுக்கு இடையே பொருந்தாமை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முரண்பாடுகள் காரணமாக திறமையான மாணவர்களின் இளநிலை மருத்துவப் படிப்பு வாய்ப்பு பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் வலியுறுத்தினர். இது குறித்து என்.டி.ஏ.-வை அணுகியபோதும் நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் மருத்துவ கலந்தாய்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரினர். அவசர பட்டியலிட கோரியபோது, நிலைமையை கருத்தில் கொண்டு வழக்கை விரைந்து விசாரணைக்கு பட்டியலிடுவதாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் உறுதி அளித்தார்.





