புதுடில்லி: எதிர்க்கட்சிகள் பார்லி நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கி வரும் நிலை விரைவில் தீர்க்கப்படும் என மத்திய பார்லி விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அவை நடவடிக்கைகளுக்கு தடையாக இருந்து வருகின்றன. விவாதத்திற்கு அரசு தயாராக இருப்பதாக கூறினாலும், எதிர்க்கட்சிகள் அதை ஏற்காமல் முடக்கத்தை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், ரிஜிஜூ இன்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கடந்த 10 நாட்களில் இருவரும் சந்திக்கும் இரண்டாவது சந்திப்பு இது; சுமார் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மாணவர்கள் போராட்டத்தில் பெல்லட் குண்டு துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரவில்லை என்றும், அவர் பார்லியில் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருவதாக ராகுல் தெரிவித்தார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரிஜிஜூ, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், பார்லியில் நிலவும் முடக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் கூறினார்.