புதுடில்லி: இந்திய சட்டங்களுக்கு பணிய மறுத்து, சட்டவிரோதம் மற்றும் தேச விரோத உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தத் தவறும் சமூக ஊடக நிறுவனங்களின் ‘சேஃப் ஹார்பர்’ (சட்டப் பாதுகாப்பு) சலுகையை ரத்து செய்ய வேண்டும் என பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ திடீரென நீக்கப்பட்டு, சுமார் ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் மீட்டெடுக்கப்பட்ட சம்பவமும் கூட்டத்தில் பேசப்பட்டது. இதையடுத்து மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குழு பரிந்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களை முறைப்படுத்துவது தொடர்பான இந்த கூட்டம் டில்லியில் நடைபெற்றது. தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான பார்லி நிலைக்குழுத் தலைவர், பா.ஜ.க. லோக்சபா எம்.பி. நிஷிகாந்த் துபே தலைமையில் நடந்த கூட்டத்தில் மெட்டா, கூகுள், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு நிஷிகாந்த் துபே கூறியதாவது: 2000-ல் தகவல் தொழில்நுட்பச் சட்டம் இயற்றப்பட்டபோது சமூக ஊடகங்கள் இல்லை; அப்போது இணைய சேவை வழங்குநர்களுக்கே சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது சமூக ஊடகங்களும் அதே பாதுகாப்பை அனுபவிக்கின்றன. குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள், பெண்களை இழிவுபடுத்தும் வீடியோக்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்கள் போன்றவற்றை நீக்குவதில் அலட்சியம் காட்டும் நிறுவனங்களுக்கு இந்த பாதுகாப்பு தொடரக் கூடாது என குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும் அரசு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான உள்ளடக்கங்களுக்கு சில தளங்கள் முன்னுரிமை அளிப்பதாகவும், இருப்பிடத்தை மறைக்க உதவும் வி.பி.என். சேவையை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளிப்படுத்தாமல் மறைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பிரதமரின் வீடியோ முடக்கப்பட்டது கவலைக்குரியது என கூறிய அவர், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்ததற்காக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை பாராட்டியதாகவும் தெரிவித்தார்.