புவனேஷ்வர்: ஒடிஷாவின் புரி ஜெகன்னாதர் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற ரத யாத்திரையில் பயன்படுத்தப்பட்ட தேர்களின் சக்கரங்கள், டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நிறுவப்பட உள்ளன. இந்த முன்மொழிவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று தேர்களில் இருந்து தலா ஒரு சக்கரம் பிரித்து அனுப்பப்பட உள்ளது. ஜெகன்னாதரின் நந்திகோஷ், பலராமரின் தாளத்வஜா, சுபத்ராவின் தர்ப்பதலன் ஆகிய தேர்களின் சக்கரங்கள் ஜனாதிபதி மாளிகையில் நிறுவப்படும் என அதிகாரிகள் கூறினர். ஒடிஷாவின் பண்பாடு மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தை தேசிய அளவில் முன்னிறுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஜெகன்னாதர் கோவில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி அரவிந்தா பாதே, புவனேஷ்வரில் உள்ள லோக் சேவா பவனில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கையை முன்வைத்ததாக கூறினார். இதற்கு ஜனாதிபதி சம்மதம் தெரிவித்ததாகவும், இது ஒடிஷா மக்களுக்கு பெருமை தரும் தருணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன் 2024ஆம் ஆண்டு, ஒடிஷாவில் உள்ள உலக பாரம்பரிய சின்னமான சூரியனார் கோவிலின் கல் சக்கர மாதிரிகள் ஜனாதிபதி மாளிகையில் நிறுவப்பட்டதாகவும் செய்தி குறிப்பிடுகிறது. ரத யாத்திரைக்காக ஆண்டுதோறும் புதிய மரங்களால் மூன்று தெய்வங்களுக்கும் புதிய தேர்கள் உருவாக்கப்படுகின்றன.
திருவிழா முடிந்ததும் பாரம்பரிய முறையில் தேரின் பாகங்கள் பிரிக்கப்படும். சில மரப்பாகங்கள் கோவிலின் மடப்பள்ளி சமையலறை பயன்பாட்டுக்கு வழங்கப்படுகின்றன; முக்கியமான பாகங்கள் பக்தர்களுக்காக ஏலம் விடப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





