சென்னை: பள்ளிக்கல்வித்துறைக்கு வெற்றிக்கழக அரசின் பட்ஜெட் மூலம் “உண்மையான” நிதி உயர்வு கிடைத்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், 2025–26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.46,767 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்புவரை செலவிடப்பட்ட தொகை ரூ.42,351 கோடி மட்டுமே எனவும் குறிப்பிட்டார்.

புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத 2026–27 இடைக்கால பட்ஜெட்டில், ஊதிய வரம்புகள் உள்ளிட்ட செலவினங்களை மிகை மதிப்பீடு செய்து பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி என அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். இது 2025–26ல் உண்மையில் செலவிடப்பட்ட தொகையைவிட காரணமின்றி ரூ.6,003 கோடி அதிகமாக காட்டப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்றதும் அந்த கணக்கீடுகளை சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025–26 திமுக பட்ஜெட்டில் செலவிடப்பட்டதைவிட ரூ.2,176 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதுகுறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறினார்.

தற்போதைய அரசு ஒதுக்கிய ரூ.44,527 கோடியை முதல்வரின் வழிகாட்டுதலின்படி திறம்பட பயன்படுத்தி, அதன் பலன்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வி நிர்வாகத்திற்குச் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.