அ.தி.மு.க.வில் இருந்து விலகி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பின்னர் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கட்சியில் இணைந்த நான்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்களிடம், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி வந்த புகாரைத் தொடர்ந்து, சபாநாயகர் பிரபாகர் நேற்று விசாரணை நடத்தினார்.
பெருந்துறை ஜெயகுமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் சட்டசபையில் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் முறையிடப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 4 அன்று தலைமை செயலகத்தில் உள்ள தனது அறையில் இரு தரப்பினரும் ஆஜராக வேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நால்வரும் ஆஜராகினர்; பழனிசாமிக்கு பதிலாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய்சுந்தரம் ஆஜராகினர்.
இரு தரப்பினரிடமும் பல்வேறு விளக்கங்களை சபாநாயகர் கேட்டார். அவர்கள் அளித்த விளக்கங்கள் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணைக்காக மீண்டும் ஆஜராக வேண்டும் என தெரிவித்து அவர்களை அனுப்பி வைத்தார்.
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால், கூட்டத்தொடர் முடிந்த பிறகு விசாரணை மீண்டும் தொடங்கும் என கூறப்படுகிறது. இதேபோல், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை சி. விஜயபாஸ்கர் ஆகியோர் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.





