புதுடில்லி: ‘டிஜிட்டல் கைது’ உள்ளிட்ட இணைய நிதி மோசடிகளைத் தடுக்க வங்கிகள், மாநில அரசுகள் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இழந்த பணத்தை மீட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறை வழிகளை உடனடியாக ஆராய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் இந்த மோசடியில், போலீஸ், அமலாக்கத் துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளின் பெயரை பயன்படுத்தி மொபைல் வீடியோ அழைப்பில் மிரட்டி பணம் பறிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மூத்த குடிமக்கள் குறிவைக்கப்படுவதுடன், நன்கு படித்தவர்களும் ஏமாற்றப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வரும் நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு பல உத்தரவுகளை பிறப்பித்தது. சைபர் குற்றங்கள் மற்றும் முடக்கப்பட்ட அல்லது போலி வங்கி கணக்குகள் வழியாக நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளை கையாள, ரிசர்வ் வங்கி உடனடியாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்து அனைத்து வங்கிகளுக்கும் வழங்க வேண்டும்; அதனை அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டது.
சைபர் மோசடியில் பணத்தை இழந்தவர்களின் புகார்களுக்கு தாமதமின்றி தீர்வு காண வேண்டும் என்றும், மாநிலம் மற்றும் வங்கி வாரியாக குறைதீர்ப்பு விவரங்களை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் புகார்கள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பது தெளிவாகும் எனக் கூறப்பட்டது.
மேலும், சைபர் மோசடி புகார்களில் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து பாதிக்கப்பட்டோரின் பணத்தை விரைவாக மீட்டு வழங்கும் புதிய அமைப்பை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இழந்த பணத்தை மீட்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு அமைத்த துறைசார் குழுக்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் ஆலோசித்து தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பண மீட்பு வழிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.





