நடப்பு நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட் ஆவணத்தில், தமிழக அரசின் நிதிநிலை ஒரு ரூபாயில் வரவு எவ்வாறு உருவாகிறது, செலவு எவ்வாறு பகிரப்படுகிறது என்பதற்கான பங்கீடு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

வரவு பக்கத்தில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 43.3% ஆக அதிக பங்கைக் கொண்டுள்ளது. பொதுக்கடன் 33.1% ஆக உள்ளது. மத்திய வரிகளில் மாநில பங்கு 11.9% என்றும், மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் 6.3% என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் 5.3% ஆகவும், கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவு 0.1% ஆகவும் பட்ஜெட் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவு பக்கத்தில், உதவித் தொகைகளும் மானியங்களும் 33.2% ஆக மிகப்பெரிய பங்காக உள்ளது. சம்பளங்கள் 17.3% ஆகவும், வட்டி செலுத்துதல் 15.0% ஆகவும் உள்ளது.

மூலதனச் செலவு 10.9% என்றும், கடன்களை திருப்பிச் செலுத்துதல் 9.9% என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள் 8.0%, செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புகள் 3.8%, கடன் வழங்குதல் 1.9% என பட்ஜெட் பங்கீடு விவரங்கள் தெரிவிக்கின்றன.