சென்னையில் பட்ஜெட் உரையாற்றிய தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த ஐந்தாண்டுகளில் அரசுக் கடன் இருமடங்காக உயர்ந்து தற்போது ரூ.10 லட்சம் கோடி அளவில் இருப்பதாக தெரிவித்தார்.
ஆட்சி பொறுப்பேற்ற உடனே நிதி மேலாண்மை தொடர்பான வெள்ளை அறிக்கையின் மூலம் கடன் நிலை தெளிவுபடுத்தப்பட்டதாக அவர் கூறினார். மேலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சொந்த வரி வருவாயின் விகிதம், வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல நிதிக் குறியீடுகளில் தமிழகம் பிற இணை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மொத்த வரி வருவாயில் வட்டி செலுத்தும் தொகையும், தவிர்க்க முடியாத செலவுகளும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், புதிய திட்டங்களுக்கு கிடைக்கும் நிதி ஆதாரம் குறைவாக இருப்பதாக அமைச்சர் விளக்கினார்.
இந்நிலையில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை கட்டுக்கோப்பாக படிப்படியாக நிறைவேற்றுவதோடு, மாநிலத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,54,575 கோடியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நிதி நிர்வாகத்தை சீரமைக்க குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்றும், குறுகிய அரசியல் ஆதாயம் இல்லாமல் 15 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 2026–27-ல் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.57,775 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதே ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரசுக் கடன் ரூ.10.98 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 2026–27 நிதியாண்டில் ரூ.1,07,445 கோடி கடன் பெறவும், ரூ.51,971 கோடி திருப்பிச் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.





