தமிழகத்தின் புதிய பட்ஜெட்டில் விளையாட்டு, கல்வி, நலத்திட்டங்கள், தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதில் முக்கியமாக, மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர் நலனுக்காக, 12 மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 12 முதியோர் இல்லங்கள் அமைக்க ரூ.6.6 கோடி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படுவதுடன், தமிழகம் முழுவதும் 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்களுக்கு ரூ.33 கோடி ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.
கல்வித் துறையில், அரசுப் பள்ளிகளில் காமராஜர் காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என்றும் இதற்காக ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், அரசுப் பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குடும்ப நலத்திட்டங்களில், பெண்களின் திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டத்துக்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், கருவுற்ற பெண்களுக்கான ‘தாய் கேர்’ திட்டத்துக்கு ரூ.23 கோடி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டில், ஏஐ பல்கலை, சர்வதேச திறன் மேம்பாட்டு மையம், செமிகண்டக்டர் சோதனை ஆய்வகம் ஆகியவற்றுடன் கூடிய நாட்டின் முதலாவது பிரத்யேக ஏ.ஐ. நகரம் ‘அறிவகம்’ என்ற பெயரில் அமைக்கப்படும் என்றும் இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழி கற்றல் என்ற புதிய தொழிற்பிரிவுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 2031ம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழில்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘வெற்றி திறன் பயிற்சித் திட்டம்’ ரூ.150 கோடி, ரூ.90 கோடியில் 5 புதிய தொழில்பயிற்சி நிலையங்கள், திருப்பூரில் பசுமை ஆடை உற்பத்தியை ஊக்குவிக்கும் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டருக்கு ரூ.10 கோடி ஆகிய ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.





