அரசு அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றங்களில் லஞ்சம், ஊழல் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், மூத்த அதிகாரிகளுக்கான மாற்றங்கள் மற்றும் உயர்வுகளுக்கு இனி முதல்வர் விஜயின் ஒப்புதல் கட்டாயம் என தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை இருந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 41 அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இத்துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள், சாலைகள், குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், நீர்நிலைகள் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அரசு கட்டடங்கள் கட்டுமானம் போன்ற பணிகளும் நடைபெறுகின்றன. பல பணிகள் ஒப்பந்ததாரர்கள் வழியாக செயல்படுத்தப்படுகின்றன.
அரசாணை விவரப்படி, அனைத்து துறை செயலர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கூடுதல்/இணை/துணை செயலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் பதிவாளர்கள், கூடுதல் இயக்குநர்கள் உள்ளிட்டோரின் பதவி உயர்வு பட்டியல்கள் முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். மற்ற பணியாளர்களின் பதவி உயர்வு பட்டியல்களுக்கு தொடர்புடைய அமைச்சரின் ஒப்புதல் போதுமானது; குழப்பம் ஏற்பட்டால் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி முடிவு பெற வேண்டும்.
பணிமூப்பு அடிப்படையை மீறி வழங்கப்படும் பதவி உயர்வுகள் தொடர்பான கோப்புகள், தலைமை செயலரின் பரிந்துரை கிடைத்த பிறகே முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்ப முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அரசு தலைமை வழக்கறிஞர், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர், அரசு பிளீடர் போன்ற உயர்நிலை சட்டப் பதவிகளுக்கான நியமனங்களுக்கு முதல்வர் ஒப்புதல் கட்டாயம்; நீதிமன்றம் தொடர்பான பிற சட்ட அலுவலர் நியமனங்கள் சட்டத்துறை அமைச்சரின் முடிவுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
துறைசார் விதிகளில், நீர்வளத் துறையில் கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்களின் பணியிட மாற்றங்களை துறை அமைச்சர் மேற்கொள்வார். பொதுப்பணி துறையில் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கு துறை அமைச்சரின் ஒப்புதல் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதவள மேலாண்மைத் துறை அதிகாரி ஒருவர், இதே போன்ற உத்தரவுகள் அனைத்து துறைகளுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்களில் லஞ்சம் பெறும் நடைமுறை கட்டுப்படும் என்றும் கூறினார்.




