சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு நடைமுறையில் தற்போது எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது. மத்திய அரசு முன்மொழிந்துள்ள திருத்தங்களை தமிழக அரசு ஏற்கனவே பின்பற்றி வருவதால், புதிய மாற்றங்கள் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு விதிகளில் மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு (எம்.சி.சி.) சில மாற்றங்களை செய்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் மாநில ஒதுக்கீட்டு விதிகளிலும் திருத்தங்கள் வருமா என்ற சந்தேகம் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே எழுந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பில் வழக்கம்போல ஒருங்கிணைந்த இணையவழி நடைமுறை தொடரும். விண்ணப்பப் பதிவின்போது மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் சான்றிதழ்கள் இணைய வழியிலேயே ஆய்வு செய்யப்படும்; கலந்தாய்வுக்குப் பிறகு கல்லூரியில் சேரும் போது மட்டுமே அசல் சான்றிதழ்கள் நேரடியாக சரிபார்க்கப்படும்.
கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற இடத்தில் சேர விரும்பாதவர்கள், நிராகரிப்பு விண்ணப்பத்தை இணைய வழியிலேயே பதிவு செய்ய வேண்டும். www.tnmedicalselection.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே இடத்தை திருப்பி வழங்க விண்ணப்பிக்க முடியும்; நேரடியாக அளிக்கப்படும் கோரிக்கைகள் ஏற்கப்படாது.
முதல் சுற்றில் பங்கேற்றவர்கள் அடுத்தடுத்த சுற்றுகளில் இடங்களை மாற்றிக் கொள்ளும் முறை வழக்கம்போல தொடரும் என்றும், அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் தற்போதைய நடைமுறைப்படி நிரப்பப்படும் என்றும் குழு தெரிவித்தது. அதிகாரப்பூர்வ தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்; சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





