திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில், ஒப்பந்தப் பணிகளுக்கான பில் தொகையை வழங்குவதற்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
புகார் அளித்தவர் ஈரோடு மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (46). இவர் வெள்ளகோவில் ஒன்றியப் பகுதியில் பள்ளி சமையல் அறை அமைத்தல், ஆழ்துளைக் கிணறு அமைத்தல், டேங்க் கட்டுதல் உள்ளிட்ட நான்கு பணிகளுக்கான டெண்டரை எடுத்திருந்தார். பணிகள் முடிந்த பிறகு பில் தொகையை விடுவிக்க துணை பிடிஓ அலுவலகத்தில் விண்ணப்பித்த நிலையில், அது பரிசீலனையில் நீடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தன்னிடம் பணிபுரியும் மேற்பார்வையாளர் நந்தகுமார் மூலம் அலுவலகத்தை மீண்டும் அணுகிய போது, பில் தொகையை விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பணிகளுக்கான பில் தொகை பின்னர் விடுவிக்கப்பட்டாலும், லஞ்சம் கேட்டு தொடர்ந்து வற்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். ஆகஸ்ட் 4 அன்று போலீசார் அறிவுறுத்தலின்படி, நந்தகுமார் வெள்ளகோவில் பிடிஓ அலுவலகத்தில் துணை பிடிஓ செந்தில்குமாரிடம் ரூ.20 ஆயிரம் வழங்கிய போது, மறைந்திருந்த டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.





