தமிழக தொழிலாளர் நல வாரியங்களின் கீழ் கட்டுமான தொழிலாளர்களுக்காக அச்சிடப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள், கார்டுகளில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் இடம்பெற்றிருப்பதை காரணமாகக் காட்டி பெரும்பாலும் வழங்கப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலாளர் நலத்துறை சார்பில் பல்வேறு நல வாரியங்கள் செயல்பட்டு, தொழிலாளர்களுக்கு பல உதவித் திட்டங்களை வழங்குகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த பிப்ரவரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கான நல வாரிய “ஸ்மார்ட் கார்டுகள்” அச்சிடப்பட்டன. இதில் தொழிலாளரின் படம், முகவரி, பிறந்த தேதி, அலைபேசி எண், பதிவு எண், பதிவு செய்த நாள், புதுப்பிக்க வேண்டிய நாள் உள்ளிட்ட விவரங்கள் கியூஆர் கோடு வசதியுடன் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
அந்த கார்டுகளின் இரு புறங்களிலும் ஸ்டாலின் படம் இருந்ததாகவும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 20 ஆயிரம் வீதம் மொத்தம் சுமார் 3 லட்சம் கார்டுகள் வரை அச்சிட்டு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மார்ச் முதல் வாரத்தில் தொழிலாளர் நல அலுவலகங்களுக்கு வந்தன.
ஆரம்பத்தில் சில தொழிலாளர்களுக்கு மட்டும் கார்டுகள் வழங்கப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தல் அறிவிப்பு வந்ததையடுத்து வழங்கல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், முன்னாள் முதல்வர் படம் அச்சிடப்பட்ட கார்டுகள் கடந்த மூன்று மாதங்களாக பயன்பாடின்றி அலுவலகங்களில் தேங்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.





