மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8ம் தேதி புதுச்சேரி வருகை தர உள்ளார். புதுச்சேரி போலீஸ் துறைக்கு ஜனாதிபதியின் வண்ண விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விருதை வழங்கும் நிகழ்ச்சிக்காக இந்த பயணம் நடைபெறுகிறது.

திட்டமிட்ட அட்டவணைப்படி, டில்லியில் இருந்து சென்னை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4:55 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் வருகிறார். பின்னர் சாலை மார்க்கமாக சென்று, கடற்கரையையொட்டி உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

ஆகஸ்ட் 9ம் தேதி காலை 8:10 மணிக்கு கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, போலீசாருக்கு ஜனாதிபதியின் வண்ண விருதை வழங்குகிறார்.

விழா முடிந்ததும் காலை 10:50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை சென்று ரமண ஆசிரமம் மற்றும் கோவிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டில்லி புறப்படுகிறார்.