பீஜிங், அமெரிக்காவின் ஆறு முக்கிய நிறுவனங்களை பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாகவும், ட்ரோன்கள் தொடர்பான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக அமல்படுத்துவதாகவும் அறிவித்துள்ளது. இது இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக–தொழில்நுட்ப மோதல் தீவிரமாவதை காட்டுகிறது.

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து எனக் கூறி அமெரிக்கா அண்மையில் சீன ரோபோக்களுக்கு தடை விதித்ததுடன், புதிய வரிகள் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்தது. இதன் பின்னணியில் இருதரப்பு உறவில் கூடுதல் சிக்கல்கள் உருவாகியுள்ளன.

அமெரிக்க நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே அமெரிக்க ஏற்றுமதி நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளை சீனா அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஆறு நிறுவனங்களில் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் புவி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

மேலும் ட்ரோன்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக சீனா கூறியுள்ளது. கறுப்புப் பட்டியலில் உள்ள நிறுவனங்களுடன் சீனாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பரிவர்த்தனை உள்ளிட்ட எந்தவிதமான தொடர்புகளிலும் ஈடுபடக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.