சென்னை: 2026-27 ஆண்டிற்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சனுக்கும், வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் வினோத்துக்கும் முதல்வர் விஜய் பாராட்டு தெரிவித்தார்.
வெளியிட்ட அறிக்கையில், ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் தமிழக வளர்ச்சியை இலக்காகவும் மக்கள் நலனை மையமாகவும் கொண்டு அனைவரும் பாராட்டும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பட்ஜெட் தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்து மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் இருப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
மேலும், வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழகத்தின் வேளாண் வளர்ச்சியுடன் இணைந்து கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற துணைத் துறைகளையும் மேம்படுத்துவதோடு, அனைத்து தரப்பு விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இறுதியாக, “வளமான தமிழகத்தை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்” என முதல்வர் விஜய் தெரிவித்தார்.





