குறிப்பிட்ட வகையில் சட்டம் இயற்றும்படி மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த சாலை பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்கும் போது இந்தக் கருத்தை நீதிமன்றம் பதிவு செய்தது.

சேலத்தை சேர்ந்த தமிழ் சாலை பண்பாட்டு கழகத்தின் நிறுவனர் ஆர். தம்பையா, தமிழக அரசுக்கு சாலை பாதுகாப்பு சட்டம் கொண்டு வர உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், உள்ளாட்சி சாலைகளில் நடைபாதைகள் அமைத்தல், நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றல், இருசக்கர வாகனங்களுக்கு தனி வழித்தடம் ஏற்படுத்தல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் கடைகள் அமைப்பதைத் தடை செய்வது உள்ளிட்ட 19 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குறிப்பிட்ட முறையில் சட்டம் இயற்றுமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும், பல கோரிக்கைகளை ஒரே மனுவில் முன்வைக்க முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில், மனுதாரர் தன் கோரிக்கைகள் தொடர்பாக தனித்தனியாக வழக்குகள் தொடரலாம் என அனுமதி அளித்தது.