‘நீதிமன்ற அவமதிப்பு’ என்ற வார்த்தையை கேட்டாலே நடுக்கம் ஏற்படும் காலம் கடந்துவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டு, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததைக் குறித்து கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளது.
கால்நடை பராமரிப்பு துறையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றும் டாக்டர் செந்தில்குமார், 2025 ஜூனில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடிக்கு மாற்றப்பட்டார். நான்கு மாதங்களுக்குள் அங்கிருந்து துாத்துக்குடி மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மாற்றத்தை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை உயர் நீதிமன்றம் பணியிட மாற்றத்துக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனால் அந்த உத்தரவை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை; அவரை பணியில் சேர அனுமதிக்காததுடன், ஊதியத்தையும் விடுவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
விசாரணையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், துறை செயலர் முதல் எதிர்மனுதாரராக இருந்தும் விவகாரம் அலட்சியமாக கையாளப்பட்டதாகக் குறிப்பிட்டார். உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தின் கண்ணியம் பாதிக்கப்படும் என்றும், அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு உதவுவது தங்களின் கடமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவை அமல்படுத்துவது அல்லது அமல்படுத்தாததற்கான நம்பத்தகுந்த விளக்கத்தை அளிப்பது என்ற இரண்டு வழிகளே உள்ளன என நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, கால்நடை பராமரிப்பு துறையின் தற்போதைய இயக்குனர் எச். கிருஷ்ண உன்னி மற்றும் முன்னாள் இயக்குனர் எஸ்.பி. அம்ரித் ஆகியோர் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.





