தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.

வெளியிட்ட அறிக்கையில், தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதையும் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வானிலை அமைப்புகளின் காரணமாக, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை மலைப்பகுதிகள், தேனி மலைப்பகுதிகள், நெல்லை மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை (ஆகஸ்ட் 7) நீலகிரி, கோவை மற்றும் தேனி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.