‘ஆப்பரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் போது, போர் நிறுத்தம் கோரிய பாகிஸ்தானை இந்தியா பல மணி நேரம் காத்திருக்க வைத்ததாக முன்னாள் முப்படைத் தலைமைத் தளபதி (சிடிஎஸ்) ஜெனரல் அனில் சவுஹான் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இதை கூறினார்.
அவரது விளக்கப்படி, கடந்த ஆண்டு ஏப்ரலில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக மே 7 அதிகாலை ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டது.
மே 7 முதல் மே 10 வரை மூன்று நாட்கள் மோதல் நீடித்ததாகவும், ஆரம்பத்தில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் ராணுவ தளங்கள் மீது இந்திய படைகள் தாக்குதல் நடத்தி முக்கிய தளங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் உள்ளிட்ட ரஹீம் யார் கான், போலாரி போன்ற தளங்கள் இன்னும் இயல்பான செயல்பாட்டிற்கு திரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எல்லையை கடக்காமலேயே பல ரேடார் நிலையங்கள் அழிக்கப்பட்டதாகவும், பாகிஸ்தானும் அதுபோன்ற தாக்குதல்களை முயன்றதாகவும் கூறினார்.
மே 10 காலை 9:30 மணிக்கு இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) ஹாட்லைன் எண்ணில் பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் கோரியதாக சவுஹான் தெரிவித்தார். முடிவு தெளிவான வெற்றியாக இருக்க வேண்டும் என்பதால், ஏற்கனவே திட்டமிட்டபடி மே 10 மதியம் வரை தாக்குதல்கள் தொடரப்பட்டு அதன் பின்னரே போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.





