டெஹ்ரான்: ஈரானின் மதத் தலைவர் மொஜ்தபா கமேனியை இந்த நேரத்தில் தொடர்பு கொள்வது “மிகவும் கடினம்” என்று அந்நாட்டு அதிபர் மசூத் பெஜெஸ்கியான் தெரிவித்துள்ளார். அவரது பொதுத் தோற்றமின்மை தொடர்பாக ஈரான் மற்றும் சர்வதேச ஊடகங்களில் பல்வேறு ஊகங்கள் பரவி வரும் நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
செய்தி விவரப்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அயோதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் புதிய மதத் தலைவராக அவரது மகன் மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் பொதுவெளியில் தோன்றவில்லை; தந்தையின் இறுதிச்சடங்கிலும் பங்கேற்கவில்லை. அவரின் பெயரில் அறிக்கைகள் மட்டும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், மொஜ்தபா கமேனி உயிரிழந்தார் அல்லது படுகாயம் அடைந்தார் என்ற தகவல்களும் வெளியானது. ஆனால் இதை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மேலும், மொஜ்தபா கமேனிக்கும் அதிபர் பெஜெஸ்கியானுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும், தற்போதைய மோதல் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான முடிவுகளில் இறுதிக்கெடு விதிக்கப்பட்டதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பெஜெஸ்கியான், ஈரான் மேற்கொள்ளும் பதிலடி நடவடிக்கைகளில் மொஜ்தபா கமேனி முக்கிய பங்காற்றி வருவதாக கூறினார். ஆனால் தற்போதைய சூழலில் அவரை தொடர்பு கொள்வது கடினம் என்றும், அவரது ஆதரவு தங்களுக்கு பலமாக இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், “தீய எண்ணம் கொண்டவர்கள்” அவரை வேறுவிதமாக சித்தரித்து மாறுபட்ட பிம்பத்தை உருவாக்க முயல்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.





