கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மீண்டும் வலுவடைந்து கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கடந்த நான்கு நாட்களில் மழை தொடர்பான உயிரிழப்புகள் 27 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது; மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.

ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ அறிவிக்கப்பட்ட நிலையில், மழை நேற்றும் நீடித்தது. முன்னெச்சரிக்கையாக திருச்சூர், இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம், ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. 418 முகாம்களில் 18,434 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மழை தொடர்ந்தது.

நிலச்சரிவு அபாயம் அதிகமாக உள்ள வயநாடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருவதால் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; இரவு நேரங்களில் மலையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் மேகஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கோழிக்கோடு–வயநாடு மற்றும் கண்ணூர்–வயநாடு இடையிலான மலைப்பாதைகளில் இரவு நேர பயணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.